11/Oct/2020 12:10:52
சென்னை: தமிழகத்தில் புதிதாக, 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தமிழக அரசுக்கும், 1௦0-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் இடையே, விரைவில் கையெழுத்தாக உள்ளன.
தமிழக அரசு, பொருளாதாரத்தை மீட்டெடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில், அதிக கவனம் செலுத்தி வருகிறது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, வெளிநாட்டு தூதர்கள் உடனான சந்திப்பு மற்றும் சிறப்பு பணிக்குழு அமைத்தல் என, பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
மேலும், தமிழகத்தில் முதலீடு செய்ய, அழைப்பு விடுத்து, தொழில் நிறுவனங்களுக்கு, முதல்வர் அவ்வப்போது கடிதம் எழுதி வருகிறார். முதலீடு செய்ய வரும்படி, முன்னணி மோட்டார் நிறுவனங்களுக்கு, ஜூனில் அழைப்பு விடுத்திருந்தார். இதன் காரணமாக, ஊரடங்கின் போது, 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை முதலீடு பெறப்பட்டது.
தற்போது, மேலும், 9,000 கோடி ரூபாய் வரை முதலீடு கிடைக்கவுள்ளது.இதுகுறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் தொழில் துவங்க, ஏப்ரல் முதல் ஜூலை வரை, 41 நிறுவனங்கள், அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இதன் வாயிலாக, 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடும், 66 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். தற்போது, கூடுதலாக, 9,000 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கவுள்ளது. இது தொடர்பாக, பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளன.இதன் வாயிலாக, 6,000த்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
வெளிநாட்டு முதலீடு ஈர்ப்பில் தமிழகத்திற்கு இரண்டாமிடம்:
கொரோனா ஊரடங்கு காலத்திலும், வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் ஈர்த்த மாநிலங்கள் பட்டியலில், தமிழகம் இரண்டாமிடம் பிடித்துள்ளது. பிராஜக்ட் டுடே என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்த விவரம் தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனம், இந்தாண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான, மூன்று மாதங்களில், ஒவ்வொரு மாநிலமும் ஈர்த்துள்ள, வெளிநாடு முதலீடுகள் குறித்த விபரங்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி, சத்தீஸ்கர் மாநிலம், 114 திட்டப் பணிகளுக்கு, 35 ஆயிரத்து, 771 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து, முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகம், 132 திட்டப் பணிகளுக்கு, 23 ஆயிரத்து, 332 கோடி ரூபாய், முதலீடுகளை ஈர்த்து, இரண்டாம் இடம் பெற்றுள்ளது.கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம், ஆந்திரம் போன்ற மாநிலங்கள், அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. இந்த விவரத்தை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது, டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், தமிழகத்தின் பொருளாதாரத்தை சரியான பாதையில், கொண்டு வருவதற்கான, எங்களுடைய உறுதியான முயற்சிகள், பலனை தருகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.