25/Feb/2021 07:37:13
புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பயணிகள் மற்றும் நகர் நல இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று அம்மா மினி கிளினிக்கை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
புதுக்கோட்டையில், நகராட்சி பேருந்து நிலையம் அமைக்க கடந்த 1966 -ல் அப்போதைய உணவுத்துறை அமைச்சர் ராமையா அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து 19.4.1981 -இல் சுமார் ரூ 46 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் ஆர்.எம்.வீ திறந்து வைத்தார். இதில் 60 கடைகளும், 10 -க்கும் மேல்பட்ட தினசரி வாடகை அறைகளும் மூன்று கட்டணக் கழிப்பறை கழிப்பறைகளும் உள்ளன.
இதைத் தொடர்ந்து(1912-2012) நகராட்சி நூற்றாண்டு விழாவையொட்டி சுமார் ரூ.1.65 கோடியில் பேருந்து நிலையம் சீரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டில் மேலும் ரூ.2 கோடியில் நுழைவு வாயில் வளைவுகள் மற்றும் நடுப்பகுதியில் புதிய கடைகள் தடைத்தளம் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டு ஒரிரு நாளில் திறக்கப்படவுள்ளது.
இந்நிலையில், தினமும் சுமார் 20 முதல் 25 ஆயிரம் பேர் வரை வந்து செல்லக்கூடிய இந்தப் பேருந்து நிலையத்தில் மக்களுக்கு அவசர சிகிச்சை உடனடியாகக் கிடைக்கும் வகையில் அரசால் கொண்டு வரப்பட்ட முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டத்தின் கீழ் அமைக்க வேண்டுமென நகர் நல இயக்கம், பயணிகள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பேருந்து நிலையத்தின் மையப்பகுதியிலுள்ள பயணிகள் ஓய்வு அறை அருகே இருந்த தபால் நிலையம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு காலியாக இருந்த அந்த இடத்தை அமைச்சரின் ஆலோசனையின் பேரில் நகராட்சி நிர்வாகமும், சுகாதாரத்துறையும் தேர்வு செய்தது.
இதையடுத்து, புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாராத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கள் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார். இதில், முன்னாள் எம்எல்ஏ-வி.ஆர். கார்த்திக் தொண்டை மான், நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிரமணியன், மருத்துவத்துறை துணை இயக்குநர் பா. கலைவாணி. வேளாண்விற்பனைக்குழு தலைவர் க. பாஸ்கர், கூட்டுறவு அச்சக சங்கத் தலைவர் எஸ்ஏஎஸ்.சேட், நகர் நல இயக்கத்தலைவர் ரா. சம்பத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.