11/Apr/2021 08:09:36
புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவர் ம. ஜனார்த்தனனுக்கு உலகளாவிய மனித அமைதிக்கான பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த இவர் சென்னை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் சமூக சேவகர்க்கான முதலாமாண்டு பட்டயப் படிப்பு படிக்கின்றார். புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் புதுகை பேருந்து நிலையத்தின் சுற்றுச் சுவர்களில் மத்திய அரசின் திட்டங்கள் பற்றிவிழிப்புணர்வு ஓவியங்களை வரைந்திருக் கிறார். மேலும் 2014 ஆம் ஆண்டிலிருந்து தூய்மை இந்தியா உள்ளிட்ட மத்திய அரசின் சேவை திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் மாணவர்களுக்கு நடத்தி வருகிறார்.
புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா மற்றும் சமூக அமைப்புகளின் மூலம் மரக்கன்றுகளையும் நடவு செய்து வருகிறார். மேலும் நிர்வாகத்தில் இளைஞர்களின் பங்கு பற்றியும் நாட்டின் வளர்ச்சி பற்றியும் என் வயது பதினைந்து என்ற நூலை எழுதியதற்காக அண்மையில் பாராட்டுப் பெற்றார். பல்வேறு கருத்தரங்குகளில் சமூக விழிப்புணர்வு தொடர்பாக உரையாற்றியுள்ளார்.
மாணவர் ஜனார்த்தனனின் சமூகம் சார்ந்த செயல்பாடுகளைப் பாராட்டி உலகளாவிய மனித அமைதிக்கான பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. கோயம்புத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரத் சேவா சமாஜ் அமைப்பின் நிறுவனர், தலைவர் டாக்டர் பி. மேனுவல் மாணவர் ஜனார்த்தனனுக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தார்
இந்நிகழ்வில், வங்காளதேசத்தின் மக்களவை உறுப்பினர் மம்தாஜ்பேகம், முன்னாள் அரசுத்துறை ஆணையர் கே சம்பத்குமார், முன்னாள் நீதிபதி முருகானந்தம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். முனைவர் பட்டம் பெற்ற மாணவர் ஜனார்த்தனனை பேராசிரியர்கள் கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டினார்கள்