logo
 புதுக்கோட்டை நகரில் பொது முடக்க விதிமுறைகளை மீறியாத  8 ஜவுளி கடைகளுக்கு அபராதம் விதிப்பு

புதுக்கோட்டை நகரில் பொது முடக்க விதிமுறைகளை மீறியாத 8 ஜவுளி கடைகளுக்கு அபராதம் விதிப்பு

11/Jun/2021 10:04:30

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை நகரில் பொது முடக்க விதிமுறைகளை மீறி கடைகளைத் திறந்து வியாபாரம் செய்ததாக  8 ஜவுளி கடைகளுக்கு ரூ.32 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் வரும் (ஜூன்) 14-ஆம் தேதி வரை தளர்வு உடன் கூடிய பொது முடக்கம்  நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதில், ஜவுளி கடைகள், பெரிய மால்கள், தேநீர் கடைகள், சலூன் கடைகள், பொதுப்போக்குவரத்து உள்பட பல்வேறு தடைகளை தமிழக அரசு விதித்துள்ளது. ஊரடங்கை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம எச்சரித்திருந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு முடக்கத்தை காவல்துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், விதிமுறைகளை மீறி புதுக்கோடடை நகரில் ஜவுளி நிறுவனங்கள் கதவை மூடிக்கொண்டு வியாபாரம் செய்வதாக  கிடைத்த தகவலின்பேரில் புதுக்கோட்டை நகராட்சிப் பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் தலைமையிலான நகராட்சி அலுவலர்கள் கீழராஜவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வியாழக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, பொது முடக்கக் கால விதிமுறைகளை மீறி கடைகளைத் திறந்து வியாபாரம் செய்த 8 கடைகளுக்கு ரூ.32 ஆயிரம்   அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விதிகளை மீறி தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஒலிபெருக்கி மூலம் நகராட்சிப் பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன்  எச்சரித்தார்.

                                                  

        

Top