logo
உங்கள் தொகுதியில் முதலமைச்சர்  துறை மூலம்  பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு  தீர்வு காணப்படுகிறது: அமைச்சர் எஸ். ரகுபதி

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை மூலம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்படுகிறது: அமைச்சர் எஸ். ரகுபதி

29/Jun/2021 08:14:12

புதுக்கோட்டை, ஜூன் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில்  நடைபெற்ற நிகழ்வில்  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி பங்கேற்று  உங்கள் தொகுதியில் முதலமைச்சர்  முகாம்  மூலம்  பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில்  தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கி  அவர் பேசியதாவது:

தேர்தலுக்கு முன்பாக தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர்   மாவட்டங்களுக்கு வருகை தந்தபோது பொதுமக்களிடமிருந்து பெற்ற கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில்  உங்கள் தொகுதியில் முதலமைச்சர்  என்ற தனித்துறையை உருவாக்கி உள்ளார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்துள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டு வருகிறது என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர்  நிகழ்வு  நடைபெற்று வருகிறது.


இதில் வருவாய் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களும், 10 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக் கான ஆணைகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.10,000 மதிப்பீட்டில் காதொலி கருவிகளும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு அடையாள அட்டையும், ஒரு பயனாளிக்கு விலையில்லா சலவை இயந்திரமும்  வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியருக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட நபருக்கும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மனுதாரர் தன்னுடைய மனுவின்மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படுகிறது என்பதை அறிந்து கொள்வதுடன் தமிழ்நாடு முதலமைச்சர்  மனுதாரர்களுக்கு உரிய நம்பிக்கையை அளித்துள்ளார்.

கோவிட் தொற்று காரணமாக குறைவான மனுதாரர்களுக்கு தற்பொழுது நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மீதமுள்ளவர்களுக்கு அவர்கள் வீடுகளுக்கே சென்றோ அல்லது சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களிலோ  நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோன்று கடந்த 10 மாத காலமாக எவ்வித மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே தற்பொழுது மின்வெட்டை தவிர்க்கும் வகையில் மின்சார வாரியம் முழு வீச்சில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. விரைவில் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

நகரப்பட்டியில் அமைக்கப்பட்ட துணைமின் நிலையம் விரைவில்  திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். கடியாப்பட்டி மற்றும் குழிபிறையில் துணை மின் நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி  முடிக்கப்பட்டுள்ளதுடன் நற்சாந்துப்பட்டியில் துணை மின் நிலையம் அமைக்க இடம் கிடைக்காததால் தேக்காட்டூர் ஊராட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

இத்தகைய அனைத்து மின் திட்டங்களும் முழுமையாக ஓரிரு ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதனால் திருமயம் தொகுதி மின்மிகை தொகுதியாக மாற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

தமிழ்நாடு முதலமைச்சர்  ஏற்கெனவே பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியின் படி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4,000 நிவராணத் தொகை வழங்கப்பட்டுள்ளதுடன் 14 வகையான மளிகை பொருட்கள் தொகுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

நகரப் பேருந்துகளில் மகளிர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயண சலுகை வழங்கப்படுகிறதுமுதலமைச்சர் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் படிப்படியாக நிறைவேற்றுவார் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி.

இதில்,மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கதிர்வேலு, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, வட்டாட்சியர் சுரேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசுப்புராம், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு () சிதம்பரம் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Top